சிவகங்கை: நிதி ஒதுக்காமல் சீமைக் கருவேல மரங்களை எப்படி அகற்ற முடியும் என சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்களை ஆய்வு செய்த பின்னர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கண்காணிப்புக் குழு தலைவருமான செல்வம் கேள்வி எழுப்பினார்.
பருவமழை தொடங்கு வதற்கு முன்பு சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அந்த இடங்களில் உள்ளூர் மரங்களை வளர்க்க வேண்டும். தனியார் இடங்களில் அதன் உரிமையாளர்களே மரங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்பணியை தென் மாவட்டங்களில் விரைவுபடுத்தி கண்காணிக்கும் அமைப்பின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, நேற்று சிவகங்கை அருகே இலந்தங்குடிபட்டி கண்மாய், கண்டாங்கிபட்டி சில்லாரிக் கருப்பன் கண்மாய் ஆகிய இடங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், முன்னாள் நீதிபதி செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது:
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளேன். சீமைக் கருவேல மரங்களை குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டால் தான் அகற்ற முடியும். போதிய நிதி ஒதுக்காமல் சீமைக் கருவேல மரங்களை எப்படி அகற்ற முடியும்?
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது ரூ.5 கோடியை முதல்வர் ஒதுக்கி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.மனிதனுக்கு புற்றுநோய் போல், மண்ணுக்கு சீமைக் கருவேல மரங்கள் ஆபத்தானது. இதனால் அவற்றை அகற்ற அரசு மட்டுமின்றி பொதுமக்களும் தனி கவனம் செலுத்த வேண்டும்.