படங்கள்:என்.கணேஷ்ராஜ்
பெரியகுளம்: காலநிலை மாற்றத்தால் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. விடிந்து பல மணி நேரமாகியும் விலகாமல் படர்ந்திருந்த பனி பரவலை பலரும் ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் நிலவி வருகிறது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் நீர்ச்செறிவு பெற்றுள்ளதால் அங்கு கூடுதல் குளிர்நிலவி வருகிறது.
இதனால் தொடர்ந்து காலை நேரங்களில் இங்கு மூடுபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சின்னமனூர், அல்லிநகரம், தாமரைக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இது போன்ற மாற்றம் தென்படுகிறது.
பொதுவாக சூரிய உதயத்துக்குப் பிறகு மூடுபனி மறைந்து விடும். ஆனால் இன்று சூரிய வெப்பம் குறைவாக இருந்ததால் மூடுபனி காலை 11 மணி வரை நீடித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையை வெகுவாய் மறைத்து கூடுதல் நேரம் காட்சி தந்த இந்த மூடுபனியை பலரும் ரசித்தனர்.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “இரவில் குளிர் அதிகரித்து இதுபோன்ற மூடுபனி ஏற்படுகிறது. பொதுவாக வெயில் வந்ததும் இது மறைந்து விடும். ஆனால் சில தினங்களாக காலை வெயிலின் வெப்பம் குறைவாக இருப்பதால் விடிந்து பல மணி நேரமாகியும் பனி விலகிச் செல்லாத நிலை உள்ளது” என்றனர்.