ஓசூரில் நைலான் நூலில் கால் சிக்கி பறக்க முடியாமல் தவித்த காகத்தை மரக்கிளையை வெட்டி மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

 
சுற்றுச்சூழல்

நைலான் நூலில் சிக்கி பறக்க முடியாமல் பரிதவித்த காகம் மீட்பு

ஓசூர் தீயணைப்பு வீரர்கள் மனிதநேய நடவடிக்கை

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் பேருந்து நிலையம் அருகே மரக்கிளையில் இருந்த நைலான் நூலில் கால் சிக்கி, நீண்ட நேரம் பறக்க முடியாமல் போராடிய காகத்தை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த காகத்துக்கு கால்நடை மருந்தகத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

ஓசூர் பேருந்து நிலையம் எதிரே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள புங்கன் மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி, குஞ்சுகளுடன் இருந்தது. இந்நிலையில், நேற்று மரக்கிளையில் கிடந்த நைலான் நூலில் அதன் கால் சிக்கிக் கொண்டது.

இதனால் பறக்க முடியாமல் தவித்த காகம், நீண்ட நேரமாக விடுபட போராடியது. மேலும், நூலில் இருந்து தப்பிக்க முயன்றதில் அதன் காலில் காயம் ஏற்பட்டு, சோர்வடைந்த நிலையில் இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஓசூர் தீயணைப்பு வீரர்கள், மரக்கிளையைப் பாதுகாப்பாக வெட்டி நைலான் நூலில் சிக்கியிருந்த காகத்தை மீட்டனர். பின்னர், காயமடைந்த காகத்துக்கு கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காகத்தின் கால் குணமடையும் வரை அதை கால்நடை மருந்தகத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனிதர்களின் கவனக் குறைவால் உயிரினங்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவற்றின் உயிரையும் மதித்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களின் மனிதநேய செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றது.ஓசூரில் நைலான் நூலில் கால் சிக்கி பறக்க முடியாமல் தவித்த காகத்தை மரக்கிளையை வெட்டி மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

SCROLL FOR NEXT