சென்னை: மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது.
குறிப்பாக பூங்காக்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பள்ளி வளாகங்கள், திறந்தவெளி இடங்கள், நீர்நிலைப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனை வளாகங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வளாகப் பகுதிகள், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மேயர் ஆர்.பிரியா, பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர், ராயபுரம் மண்டலம், பிரகாசம் சாலையில் உள்ள ஸ்ரீராமுலு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், 75-வது வார்டு, ஓட்டேரி லிங்க் சாலையில் உள்ள மூலிகைப் பூங்கா வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், சோழிங்கநல்லூர் மண்டலம், 199-வது வார்டு, சத்தியவாணி முத்து தெருவில் உள்ள மாநகராட்சி நீருறிஞ்சும் பூங்காவில் பி.சரவணன் எம்எல்ஏ மரக்கன்றுகளை நட்டனர்.
பட்டாளம் பகுதியில் மாநகராட்சி பூங்காவில் மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) க.கற்பகம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்களுடன் கலந்துரையாடி மரக்கன்றுகளை நட்டார்.
மேலும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள், மண்டல அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் மரக்கன்றுகளை நட்டனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் 2900 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.