தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் காணப்பட்ட கருந்தலை அன்றில்.| வெள்ளூர் கஸ்பா குளத்தில் காணப்பட்ட நாமத்தலை வாத்து.| மூலக்கரைப்பட்டி குளத்தில் காணப்பட்ட வரித்தலை வாத்து |
திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்தப்பட்ட 16-வது தாமிரபரணி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 21,091 ஈரநில பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன் கூறியதாவது: அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தாமிரபரணி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இவ்வாண்டு 16-வது கணக்கெடுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கைச் சங்கம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கை கழகம், தென்காசி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கணக்கெடுப்பு பணி கடந்த மாதம் 23, 24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 பாசனக் குளங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பறவை நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், 8 குழுக்களாக பிரிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.
சிறிய நீர்க்காகம்: 68 பாசனக் குளங்களில் இருந்து 69 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 21,091 ஈரநிலப் பறவைகள் பதிவாகின. தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பக்குளம் பகுதியில் அதிகபட்சமாக 45 இனங்களைச் சேர்ந்த 2,292 பறவைகள் பதிவாகின.
வெள்ளூர் கஸ்பா (1,804 பறவைகள் – 39 இனங்கள்), பெருங்குளம் (1,531 பறவைகள் – 39 இனங்கள்), திருநெல்வேலி மாவட்ட கங்கைகொண்டான் (1,232 பறவைகள் – 32 இனங்கள்), மேல்புதுக்குடி சுனை (1,217 பறவைகள் – 35 இனங்கள்) ஆகிய பகுதிகள் முக்கியமானவையாக இருந்தன.
பறவை இனங்களைப் பொருத்தவரை, சிறிய நீர்க்காகம் அதிக எண்ணிக்கையுடன் 2,579 பதிவானது. இதனைத் தொடர்ந்து நாமக் கோழி (2,155), வலசை பறவையான மீசை ஆலா (1,148), சின்ன அன்றில் (1,107), நீளவால் இலைக் கோழி (1,095) மற்றும் வலசை பறவையான தகைவிலான் (1,093) ஆகியவை அதிக எண்ணிக்கையில் பதிவாகின.
பதிவான பறவைகளில் 36 சதவீதத்துக்கும் அதிகமானவை வலசை பறவைகள். இவை வடக்கு ஐரோப்பாவின் இனப்பெருக்க பகுதிகளை இந்தியா உட்பட தென் ஆசியாவின் குளிர்கால ஈரநிலங்களுடன் இணைக்கும் மத்திய ஆசிய பறவைப் பறப்பு பாதையை (Central Asian Flyway) பயன்படுத்துகின்றன.
தாமிரபரணி பாசனக் குளங்கள், இந்த வலசை பறவைகளுக்கான மிக முக்கியமான வாழ்விடங்களாக விளங்குகின்றன. 2026 கணக்கெடுப்பில் மொத்தம் 8,912 வலசை பறவைகள் பதிவாகின.
இதில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த (Near Threatened) இனமான கருவால் மூக்கன், மேலும் வரித்தலை வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, நாமத்தலை வாத்து போன்ற வலசை வாத்தினங்களும் அடங்கும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கு கழுவூர், கங்கைகொண்டான், மானூர், மாறாந்தை மற்றும் தென்காசி மாவட்டத்தின் வாகைக்குளம் ஆகியபாசனக் குளங்களில் பறவைகளின் இனப்பெருக்கம் பதிவானது.
கூளக்கடா, கருந்தலை அன்றில், சின்ன அன்றில், பாம்புத் தாரரா, இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், நத்தைக்குத்தி நாரை போன்ற இனங்கள் இனப்பெருக்க நிலையில் காணப்பட்டன. இதன் மூலம், கூந்தன்குளம் போன்ற பாதுகாக்கப்பட்ட பறவைக் காப்பகங்களைத் தாண்டியும் பாசனக் குளங்கள் இனப்பெருக்கத்துக்கு மிக முக்கியமானவை என்பது தெளிவாகிறது
வாழ்விடங்கள் பாதிப்பு: திடக் கழிவுகள் கொட்டுதல், குளக்கரைகளில் மது அருந்துதல், அயல் தாவர மற்றும் மீன் இனங்களின் ஆக்கிரமிப்பு, நகர்ப்புற குளங்களில் கழிவுநீர் கலப்பு போன்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் முக்கிய வாழ்விடங்களை தொடர்ந்து பாதித்து வருகின்றன.
நீர்ப்பறவைகளின் வாழ்விடங்களுக்கு மேலாண்மை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. வலசை பறவைகள் பல மாதங்கள் தங்கி உணவு தேடி ஓய்வெடுக்கும் குளிர்கால வாழ்விடங்களாகவும், நீண்ட தூரப்பயணங்களில் சக்தியை மீட்டெடுக்க உதவும் இடைநிறுத்தத் தளங்களாகவும் பாசனக் குளங்கள் செயல்படுகின்றன.
இந்த ஈரநிலங்கள் அழிவடைந்தால் அல்லது தரம் குறைந்தால் சர்வதேச வலசை பாதைகள் பாதிக்கப்படும். எனவே, நீர்ப்பறவைகளின் நீண்டகால பாதுகாப்புக்கு பாசனக் குளங்களின் பாதுகாப்பு, நிலைத்த மேலாண்மை அவசியம். இவ்வாறு தெரிவித்தார்.