ராஜ்கர்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி (சமூக வலைதளங்களில் ‘பிட்டு தபாஹி’ என அறியப்படுபவர்) பிஎஸ்சி படித்து வருகிறார். ராஜ்கர் மாவட்டத்தின் பியோரா நகரில் ஓடும் ஆஜ்னார் ஆறு, பிளாஸ்டிக் குப்பைகளால் மாசடைந்திருப்பதைக் கண்டு வேதனையடைந்தார். இதையடுத்து, கடந்த ஜனவரி 26-ம் தேதி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் களமிறங்கினார்.
தூய்மைப் பணிகளுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, பொதுமக்களின் ஆதரவையும் நகராட்சி அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்தன. புகைப்படங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பியோரா நகராட்சி நிர்வாகம், இவருக்கு உதவ முன்வந்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரங்களை அனுப்பி, ஆற்றுப் படுகையில் படிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் நெகிழிப் பைகளையும் முழுமையாக அகற்றியது. அத்துடன், அப்பகுதிப் பொதுமக்களும் இவருடன் இணைந்து தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.
தொடர் முயற்சியாலும், மழைக்கால நீர் ஓட்டத்தாலும் ஆஜ்னார் ஆறு மீண்டும் தன் பழைய பொலிவைப் பெறத் தொடங்கியுள்ளது. ஒரு ஆற்றுக்கே மறுவாழ்வு அளித்து அரசு நிர்வாகத்தையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்துள்ள சுரேந்திர சிங்கின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.