மேட்டூர்: மேட்டூர் அருகே செக்கானூர் காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்து கரை ஓதுங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து 9 கி.மீ, தொலைவில் செக்கானூர் கதவணை மின்நிலையம் உள்ளது. இந்த கதவணையில் மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் உள்ளிட்டவைகளுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. தேக்கி வைக்கப்பட்ட நீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இங்குள்ள மீன்களை, மீனவர்கள் பலரும் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செக்கானூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
இந்த மீன்கன் ஒடும் நீரில் அடித்துச் செல்வதுடன் கரை ஒரங்களிலும் இறந்து மிதப்பதால் காவேரி கரையில் துர்நாற்றம் வீசுகிறது. இறந்து போன மீன்களை சிலர் சேகரித்து கரையில் வீசிச் செல்கின்றனர். மேலும், மயக்கமான மீன்களை விற்பனைக்காக பரிசல் மூலம் மீனவர்கள் எடுத்துச் சென்றனர். இதில் கல்பாசு, கெண்டை, அரஞ்சான், ஜிலேபி உள்ளிட்ட பல வகையான மீன்களும் செத்து மிதக்கின்றன.
மேட்டூர் காவிரியில் ஆங்காங்கே கலக்கின்ற ஆலைகளின் கழிவுநீர் மற்றும் மேட்டூர் அனல் நிலைய கழிவுநீர் கலப்பதால் நீரில் நச்சுதன்மை அதிகரித்து மீன்கள் செத்து மிதப்பதாக சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு காரணங்களால் கோடையில் மீன்கள் இப்படி செத்து மிதப்பதால் மேட்டூர் நீர் தேக்கம் மற்றும் காவிரியில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.
இதனை தடுக்க மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட்டு நீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி மீன்வளத்தை பாதுகாக்க வேண்டும் என இந்த மீன்களையே நம்பி இருக்கும் மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம். காவிரி ஆற்றில் இறந்து கிடந்த மீன்களை, மீன்வளத்துறை ஊழியர்கள் மூலமாக அகற்றியுள்ளோம். மீன் இறப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.