படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
சுற்றுச்சூழல்

மழைநீர் சேகரிப்பு முறை மூலம் குடிநீர் வசதி: மதுரை மாநகராட்சி பள்ளிகள் அசத்தல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 7 பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு முறையில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் மாணவர் பருவத்திலே மழைநீர் சேகரிப்பையும், தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கத்தையும் உருவாக்க மாகநராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வெறும் வாசங்களில் மட்டுமே தற்போது உள்ளது. ஆனால், ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் மழை நீர் சாக்கடையிலும், கடலிலும்தான் கலக்கின்றது. பெய்யும் மழை நீரை சேகரிக்க முடியாமல், கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, தனியார் கேன் தண்ணீரை நம்பி வாழ வேண்டிய உள்ளது.

ஆனால், மதுரை மாநகராட்சி நிர்வாகம், மழை நீர் உயிர் நீர் , மரம் வளர்ப்போம். மழை பெறுவோம் என்ற வெறும் விழிப்புணர்வோடு நின்றவிடாமல் நகர் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவருவதோடு தற்போது தங்களுடைய 8 மாநகராட்சி பள்ளிகளில் எளிய முறையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்து, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அன்றாடம் மழைநீர் சேகரிப்பில் கிடைக்கும் தண்ணீரை குடிநீராக வழங்கி அசத்தி வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் தற்போது முதற்கட்டமாக மாநகராட்சி நிர்வாகம், சுகம் என்ற அறக்கட்டளை மூலம் தத்தனேரி திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சொக்கிகுளம் காக்கை பாண்டியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிம்மக்கல் அவ்வை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்பட7 மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு மூலம் குடிநீர் வசதி அமைத்துள்ளது.

இது தொடர்பாக மேயர் இந்திராணி கூறுகையில், “நீர் சேகரிப்பு நமது தமிழர்களின் பராம்பரியப் பழக்க வழக்கம். அதனால்தான், முன்னோர்கள், குளம், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளை உருவாக்கி நீர்பாசனம் செய்து, குடிநீருக்கும் பயன்படுத்தி செழிப்பாக வாழ்ந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு வந்தவர்கள், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் பாதுகாக்காமல் விட்டதால் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

தற்போது தலைமுறையினருக்கு தண்ணீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் தெரியவில்லை. இந்த விழிப்புணர்வை மாணவர்கள் பருவத்திலே உருவாக்க, மாநகராட்சி நிர்வாகம், பள்ளிகளில் தற்போது மழைநீர் சேகரிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளது. பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் கிடைக்கும் நீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

மாணவர்கள் பருவத்திலே தண்ணீரை எப்படி சேகரிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் போன்ற நற்பண்புகளையும் ஆசியர்கள் மூலம் சொல்லிக்க கொடுக்க வைக்கிறோம். இந்த மழைநீர் சேகரிப்பு பழக்கத்தை அவர்கள் பள்ளி வளாகத்திலே கற்றுக் கொள்ளும்போது எதிர்காலத்தில் தங்கள் வீடுகள், பணிபுரியும் இடங்களில் மழைநீர் சேகரிப்பை பழக்கப்படுத்திக் கொள்வார்கள்.

மேலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கத்தை கடைபிடிப்பார்கள். இந்த சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்கவே மாநகராட்சிப்பள்ளிகளில் மழைநீர் சேரிப்பு மூலம் குடிநீர் வழங்கும் முயற்சியை தொடங்கி உள்ளோம்” என்றார். மழைநீர் சேகரிப்பு திட்டம், அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டமாக இருந்தாலும் மாற்று அரசு திட்டம் என்று ஒதுக்காமல் அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தும் மாநகராட்சியையும், அதன் மேயரையும் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

SCROLL FOR NEXT