மதுரை மாநகராட்சியில் 3 ஆண்டுகளில் 4 ஆணையாளர்கள் இடமாற்றம் - அடிக்கடி மாற்றம் ‘நிகழ்வது’ ஏன்?

இடது: பிரவீன் குமார் | வலது: மதுபாலன் | கோப்புப் படங்கள்
இடது: பிரவீன் குமார் | வலது: மதுபாலன் | கோப்புப் படங்கள்
Updated on
2 min read

மதுரை: கடந்த மூன்று ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் நான்கு ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உள்ள மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், பொறுப்பேற்ற 4 மாதத்திலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஜூனில் மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விசாகன், பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பிறகு வந்த மாநகராட்சி ஆணையாளர்கள் யாரும் நிலையாக மதுரையில் இருந்து இல்லை. விசாகனுக்கு பதிலாக வந்த கார்த்திகேயன் பொறுப்பேற்று ஓர் ஆண்டுகூட நிறைவடையாத நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது குடும்பம் சென்னையில் இருப்பதால் அவர் விருப்பப்பட்டே இடமாறுதல் வாங்கி சென்றதாக கூறப்பட்டாலும், அதன்பிறகு உடனடியாக அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதால் அவரது இடமாற்றத்திலும் அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என பின்னாளில் கூறப்பட்டது.

கார்த்திகேயனுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட சிம்ரன் ஜீத் சிங் மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிறப்பாக செயல்பட்டு நிதி நெருக்கடியில் தத்தளிதத்த மாநகராட்சியை மீட்டு வருவாயை பெருக்கி நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்து நிதி இருப்பு வைத்திருக்கும் மாநகராட்சியாக மாற்றிக்காட்டினார். ஆனாலும், அவர் உள்ளூர் அமைச்சர்கள், ஆளும் கட்சியினருக்கு நிர்வாக ரீதியான விவகாரங்களில் ஒத்துழைக்கவில்லை என்று கூறி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக கடந்த ஜூன் 9-ம் தேதி 4 மாதத்துக்கு முன் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். முதல் இரண்டு மாதம் மாநகராட்சி 100 வார்டுகளிலும் நேரடி ஆய்வுகளுக்கு சென்று, தற்போதுதான் மதுரை மாநகராட்சியின் மொத்த நிலவரத்தை தெரிந்துகொண்டு, பாதாள சாக்கடைப் பிரச்சினைகள், குடிநீரில் கழிவு நீர் கலப்பதற்கு ஒவ்வொரு வார்டாக முற்றுப்புள்ளி வைத்து வந்தார். மேலும், நிர்வாக ரீதியாக சில சீர்திருத்த நடவடிக்கைளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார். அதற்குள், அவரை தற்போது இடமாற்றம் செய்துவிட்டனர். தற்போது பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சியின் 69-வது ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடிக்கடி ஆணையாளர்கள் மாற்றப்பட்டு வருவது குறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், ‘‘மதுரை மாநகராட்சியில் முன்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செல்வாக்காக இருந்தார். அவர் ஆலோசனை கேட்டு மேயர் இந்திராணியும், மாநகராட்சி ஆணையாளராக இருந்தவர்கள் செயல்பட்டனர். அவர் இருந்தவரை மாநகராட்சி ஒரே நிர்வாக தலைமையின் கீழ் செயல்பட்டது. தற்போது அவர் அதிகாரம் குறைக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி மற்றும் கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை.

அமைச்சர் மூர்த்தி, தான் மாவட்டச் செயலாளராக புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறார். மாநகர மாவட்ட திமுக செயலாளர் தளபதி மாநகராட்சி டெண்டர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக விஷயங்களிலும் நேரடியாக தலையீட்டு வருகிறார். மேயர் இந்திராணியால், அமைச்சர் மூர்த்தி, மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோரின் தலையீடுகளை தட்டிக் கேட்க முடியவில்லை. அதனால், மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் மூர்த்தி, தளபதி, மேயர் மூன்று பேர் தலையீடு உள்ளது.

ஒரு தலைமையின் கீழ் இல்லாமல் மாநகராட்சி இயங்காமல் இப்படி மூன்று பேர் தலையீடுவதால் ஆணையாளராக வரக்கூடியவர்கள் யார் பேச்சை கேட்பது எனத் தெரியாமல் நிர்வாகத்தை சுதந்திரமாக நடத்த முடியாமல் திணறிப்போய் உள்ளனர். சுதந்திரமாகவும் அவர்களால் செயல்பட முடியவில்லை. மூன்று தலைமையில் ஒருவரை பகைத்தால்கூட ஆணையாளராக வரக்கூடியவர்கள் சிறப்பாக செயல்பட முடியாது.

ஆணையாளர் பிரவீன்குமார், ஆளும்கட்சியின் இந்த அரசியலையும் சமாளித்து நிர்வாகப் பணிகளை கொண்டு சென்று கொண்டிருந்தார். ஆனால், அதற்குள் அவரையும் தற்போது இடமாற்றம் செய்துவிட்டனர். தற்போது மாநரகாட்சியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம், புதிய சாலைப் பணிகள் நடக்கிறது.

புதிதாக வரக்கூடிய ஆணையாளர், இந்த திட்டப் பணி விவரங்களை புரிந்து கொள்வதற்கே 2 மாதங்களாகிவிடும். அதுவரை புதிதாக வரக்கூடிய மாநகராட்சி ஆணையாளரால் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடை, குடிநீரில் கழிவு நீர் கலப்பது, சிறப்பு திட்டங்களில் உடனனுக்குடன் முடிவெடுக்க முடியாது. வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்கும்நிலையில் மழைநீர் தேக்கம், பாதாள சாக்கடை பிரச்சினை போன்ற மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in