சுற்றுச்சூழல்

பழநி கோம்பைப்பட்டியில் புகுந்த காட்டு யானை - மக்காச்சோளம், கரும்பு, வீடு சேதம்

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி அருகேயுள்ள கோம்பைப்பட்டியில் விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை மக்காச்சோளம், கரும்பு மற்றும் வீட்டை சேதப்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் தென்னை, கொய்யா, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயறு வகைகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். பழநி, கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பழநி அருகேயுள்ள கோம்பைப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் வருகை அதிகமாக உள்ளது. அவைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு (நவ.23) கோம்பைபட்டியைச் சேர்ந்த தர்மதுரை, செந்திலரசு ஆகியோரின் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிட்டிருந்த கரும்பு, மக்காச்சோள பயிர்கள் மற்றும் சோலார் மின்வேலியை சேதப்படுத்தியது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கல்யாணி என்பவரது தோட்டத்து வீட்டின் மேற்கூரையையும் சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசியை தின்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. வீட்டில் யாரும் இல்லாதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இன்று (நவ.24) காலை தோட்டத்துக்கு வந்த விவசாயிகள் மக்காச்சோளம், கரும்பு பயிர்கள், சோலார் மின்வேலி மற்றும் வீட்டின் மேற்கூரை சேதமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வருவாய் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பயிர்சேதம் குறித்து பார்வையிட்டு சென்றனர். இது குறித்து கோம்பைப்பட்டி விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் யானைகளின் வருகையும் அதனால் பயிர்கள் சேதமாவதும் அதிகமாக உள்ளது. வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தாலும் அவர்கள் யானைகளை விரட்ட போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. அதே போல், பயிர் இழப்பீடு தொகையும் முறையாக வழங்குவதில்லை. யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்டவும், சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT