மதுரை: மதுரை விமான நிலையம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாய் பாசனக் கால்வாயில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக வெளியேறும் நுரை தண்ணீரால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நுரை, அப்பகுதியில் காற்றி பறப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் சிரமம் அடைந்துள்ளனர். தண்ணீரில் ரசாயன கழிவு நீர் கலக்கும் அந்த தண்ணீர், நுரையாக மாறிவிடுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆறு, மதுரை வைகை ஆறு, திருப்பூர் நொய்யல் ஆறு மற்றும் ஈரோட்டில் பவானி ஆறு போன்ற தமிழகத்தின் பல முக்கிய ஆறுகளில் ரசாயன கழிவுகள் கலக்கும்போது இதுபோல் அடிக்கடி இந்த ஆற்று தண்ணீர் ரசாயன நுரை தள்ளியபடி வெளியேறும். இதுபோல் ஆறுகளில் நுரை தண்ணீர் பொதுவாக மழைக்காலங்களில் மட்டுமே வெளியேறும். ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து பருவமழை நேரங்களில் தங்கள் கழிவுநீரை திறந்துவிடுவதாலே இதுபோல் மழைக்காலங்களில் நீர் நிலைகளில் ரசாயன நுரை வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், தற்போது வைகை ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பது ஒரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கண்மாய்களில் ரசாயன கழிவுகளை கொண்டுபோய் கலக்கும் சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அயன்பாப்பாகுடி கண்மாய் பாசன கால்வாயில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக ரசாயன கழிவு நீர் வெளியேறி வருகிறது. இந்த கண்மாய் தண்ணீர் மூலமாக அவனியாபுரம், வெள்ளக்கல், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 400 ஏக்கர் பரப்பளவில் பல்வகை பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
மதுரையில் கடந்த சில நாட்கள் பெய்து வரும் கனமழை காரணமாக அயன்பாப்பாகுடி கண்மாய் நிரம்பி பாசன கால்வாயில் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் தற்போது நுரை தள்ளியபடி வருகிறது. இந்த கண்மாயில் வெள்ளைக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக வெளியேறுவதாகவும், தனியார் நிறுவனங்கள் ரசாயன கழிவுகளை கொண்டு வந்து கலப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனாலே, இந்த கண்மாய் பாசனக் கால்வாய் தண்ணீரில் நுரை வருகிறது.
இந்த நுரையானது துர்நாற்றம் வீசும் நிலையில், இந்த தண்ணீர் விவசாய நிலத்துக்குச் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தண்ணீரில் குவியல் குவியமாக காணப்படும் இந்த நுரை, காற்றில் பறக்கிறது. அருகில் மதுரை விமான நிலையம், அதற்கு செல்லும் சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் இந்த நுரை பறப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமம் அடைந்துள்ளனர்.