

ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும், மழை குறைந்ததால் உபரிநீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை மேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் சில மாதங்களாக வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் முதல், இரண்டாம் போகத்துக்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்குப் பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 51 அடியில் இருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நவ.5, 8-ம் தேதிகளில் 66 மற்றும் 68.5 அடியை எட்டியதால் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்ததால் இன்று காலை 7 மணிக்கு 69 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இதற்காக அணையில் இருந்த சைரன் மூன்று முறை பலமாக ஒலிக்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. பொதுவாக நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் அணைக்குவரும் உபரிநீர் அப்படியே திறந்து விடப்படும். ஆனால் மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக நாளை மறுநாள் (நவ.10) தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மேலும், தேனி மாவட்டத்தின் மழையின் அளவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே, உபரிநீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை மேலும் அதிகரிக்க நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அணைக்கான நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 2 ஆயிரத்து 693 கனஅடியாகவும், வெளியேற்றம் 69கனஅடியாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தளவில் விநாடிக்கு ஆயிரத்து 855 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 105 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 127.6அடியாக உள்ளது. வைகைஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.