கோத்தகிரி: கோத்தகிரியில் யானைகள் வழித்தடத்தில் மரங்களை வெட்ட வனத்துறை அனுமதியளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் மட்டுமின்றி பல்வேறு பறவைகள் வசிக்கும் அப்பகுதியை வனத்துறை அலட்சியப்படுத்தியதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் தனியார் நிலங்களிலுள்ள மரங்களை வெட்ட பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதுவும் நீலகிரிக்கே உரித்தான பூர்வீக மரங்களை வெட்டுவதற்கு எந்த அனுமதியும் கிடையாது. இந்நிலையில், நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோத்தகிரி வனச்சரகம் மாமரம் பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், ராட்சத பலா மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் யானைகள் மற்றும் இருவாச்சி உள்ளிட்ட அரியவகை பறவைகளின் வாழிடத்திலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, "மாமரம் பகுதியில் பலா மரங்களை வெட்டி லாரியில் ஏற்றி வருகிறார்கள். இங்கு இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான பலா மரங்களே, யானைகளின் முக்கிய உணவாதாரமாக உள்ளது. அந்த மரங்களை வெட்டி சாய்த்துவிட்டால் பலா சீசன்களில் யானைகள் ஊருக்குள் வரும் அபாயம் இருக்கிறது" என்றனர்.
இயற்கை மற்றும் வனஉயிர் பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த சாதிக் கூறும் போது, "யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனியார் தோட்டமாக இருந்தாலும், யானைகள் கூடும் மிக முக்கிய இடங்களில் ஒன்றாக அந்த பகுதி இருக்கிறது.
200-க்கும் அதிகமான பறவையினங்களும் உள்ளன. இந்த மரங்களை வெட்டுவதால், அவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். அந்த பகுதியில் வனக் குற்றத் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
நீலகிரி கோட்ட வன அலுவலர் கவுதமிடம் கேட்டபோது, "தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்திலுள்ள பலா மரங்களை வெட்டுவதற்கான அனுமதி கேட்டிருந்தார்கள். 166 மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி அளித்தோம். யானைகள் நடமாடும் பகுதி என்பதால் மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் மரங்களை வெட்ட தற்காலிக தடை விதித்துள்ளோம். கள ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.