

மதுரை: அரிக்கொம்பன் யானையை சேட்டிலைட் ரேடியோ காலர் மூலம் கண்காணிக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த பிரவீன்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த யானை அரிக்கொம்பன். சின்னக்கானல் வனப்பகுதியில் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டதால், வலசை பாதை மாறி அரிக்கொம்பன் ஊருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.
அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து ஏப்ரல் 26ல் பெரியாறு புலிகள் காப்பகத்தில் விட்டனர். அங்கிருந்து கம்பம் நகருக்குள் அரிக்கொம்பன் நுழைந்தது. பின்னர் சண்முகாநதி அணையிலிருந்து சின்ன ஓவுலாபுரம் - பெருமாள்மலை அடிவாரத்துக்கு இடம் பெயர்ந்த அரிக்கொம்பனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விட்டனர்.
யானையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடமாற்றும் போது யானைகள் மீது வீரியமுள்ள மயக்க ஊசிகள் செலுத்தப்படுகிறது. இதனால் யானையின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதன் கோபம் அதிகரித்து குணம் மாறுகிறது. வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது தும்பிக்கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்படுகின்றன.
எனவே, அரிக்கொம்பன் யானையை அமைதிப்படுத்த, அதிக வீரியமுள்ள மயக்க ஊசிகளை பயன்படுத்தக்கூடாது. அரிக்கொம்பனின் இடப்பெயர்வை கண்காணிக்க சேட்டிலைட் ரோடியோ காலர் மற்றும் அடர்ந்த காட்டிற்குள் செல்ல ஆதிவாசி ஒருவர் உள்ளடங்கிய கண்காணிப்பு குழுவை உருவாக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், "அரிக்கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியால், அடர் வனப்பகுதிக்குள் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாது. எனவே சேட்டிலைட் ரேடியோ காலர் பொருத்த வேண்டும்" என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "கடந்த 5 மாதங்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலாயத்தில் அரிக்கொம்பன் யானை பாதுகாப்பாக ஆரோக்கியமான நிலையில் நடமாடி வருகிறது. அரிக்கொம்பனால் பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித அச்சுறுத்தல் இல்லை. அரிக்கொம்பனை நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "யானைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என வனத்துறைக்கு நன்றாகவே தெரியும். வனத்துறையினர் வனவிலங்குகளை சிறப்பாக கவனித்து கொள்வர். வனவிலங்குகளை ஓரளவுக்கு மேல் பின்தொடர்ந்து கண்காணிப்பது கஷ்டம். இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.