ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களுக்கு உடனடியாக தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2026 - 2027 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட்., பி.காம்., பி.எட். என இரட்டைப் பட்டப்படிப்பாக வழங்கப்படுகிறது.
வழக்கமாக 3 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பு, பின்னர் 2 ஆண்டுகள் பி.எட். என இந்த இரண்டு படிப்புகளையும் முடிக்க 5 ஆண்டுகளாகின்றன. இந்த இரட்டை பட்டப்படிப்பு முறையில் 4 ஆண்டுகளில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட். படிப்புகளை முடிக்கலாம்.
கலை, அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் ஒருங்கிணைந்த கல்வி வழங்கப்படும். இதற்கான சேர்க்கைக்கு தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேசியப் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர் ஜாஹிதா பேகம் கூறியதாவது: தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2026-27 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஜாஹிதா பேகம்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 600-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தின் கீழ் படிப்புகளை தொடங்க விண்ணப்பித்தால், அவை என்ஏஏசி, என்ஐஆர்எப் ஆகிய தர மதிப்பீடுகளை பெற்றவையாக இருக்க வேண்டும். அல்லது, அதிக ஆண்டுகள் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அனுபவம் இருந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படும்.
இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் மாநில அரசின் தடையில்லாச் சான்றுகளை 16 கல்வி நிறுவனங்கள் மட்டுமே பெற்றுள்ளன.
தமிழகத்தில் விரைவில் அமைய உள்ள அரசு, விண்ணப் பித்துள்ள தகுதியுள்ள அனைத்து கல்வியியல் கல்லூரி களுக்கும் தடையில்லா சான்று களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.