ஹம்பி: கர்நாடக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏஐ, ரோபோட்டிக்ஸ் கல்வி கிடைக்க, சையந்த் ஏஐ லேப்ஸ் - விஜயபாதா என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ஹொசப்பேட்டையில் உள்ள ஒரு அரசு பெண்கள் பள்ளியில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் மத்திய நிதியமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. முதல் கட்டமாக 5 அரசுப் பள்ளிகளில் உலகத் தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சகம் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆய்வகமும் அதிநவீன செயல்திறன் கொண்ட கணினிகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ள மென்பொருட்கள், ரோபோட்டிக்ஸ் கருவிகள், ஐஓடி சாதனங்கள், உணர்விகள் மற்றும் இணையதள வசதியுடன் அமைக்கப்படும்.
இந்த திட்டம், புதிய தேசிய கல்விக் கொள்கை, டிஜிட்டல் இந்தியா மற்றும் பிரதமர் மோடியின் வளர்ந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றுடன் இணைந்து, சிபிஎஸ்இ-யின் செய்ற்கை நுண்ணறிவு பாடதிட்டத்தை ஒருங்கிணைக்கிறது. மேலும் இது பொதுக் கல்வியில் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை வலுப்படுத்துகிறது.