படங்கள் : எம்.சாம்ராஜ் |
புதுச்சேரி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து போட்டித் தேர்வர்களுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அளித்த ஊக்க உரை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவன் நான். இளங்கலை விவசாயம் பயின்ற போது, இறுதியாண்டில் யுபிஎஸ்சி படிக்க விருப்பம் ஏற்பட்டது.
தொடக்கத்தில் எனது அறிவைப் பெருக்க ‘தி இந்து’ நாளிதழைப் படிக்கத் தொடங்கினேன். அதன்பின் ‘இந்து தமிழ் திசை‘யுடன் தொடர்பு ஏற்பட்டு, தொடர்ந்து வாசிக்கிறேன்.
நான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற ஐந்து ஆண்டுகள் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்தவன். குடும்பச் சூழலால் பயிற்சி மையத்தில் படிக்க முடியவில்லை.
படித்து முடித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு, அதில் கிடைத்த பணத்தை வைத்து யுபிஎஸ்சிக்கு தயாராக சென்னை சென்றேன். முதல்நிலை தேர்வுக்கு சென்றபோது அப்பாவுக்கு இரு சிறுநீரகங்களும் பழுதாயின.
ஒருவித நெருக்கடிக்கு மத்தியில் தயாரானேன். மூன்று முறை இன்டர்வியூ வரை சென்றேன். யுபிஎஸ்சி தேர்வுக்கு மனதளவிலும் தயாராக இருக்க வேண்டும். சற்று கடினமான பாதைதான். சில ஆண்டுகள் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்று வென்றால், நம் வாழ்க்கையேமாறிவிடும். யுபிஎஸ்சி தேர்வில் தோற்ற போது பலரும் எதிர்மறையாக சொன்னாலும் என் பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
உடனே வேலைக்குப் போக வற்புறுத்தவில்லை. பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையே நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகி உங்கள் முன் நிற்பதற்கு காரணம்.
குழந்தைகள் மீது பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது. வேறு யாரேனும் யுபிஎஸ்சி தேர்வில் உடனே வென்றால் அதை வைத்து உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு மாதிரியான அணுகுமுறை இந்தத் தேர்வில் இருக்கும். நிலையான தொடர் முயற்சி (consistency) நிச்சய வெற்றியைத் தரும். படிப்பதற்கு திட்டமிடுவது மட்டுமல்லாமல் உணவருந்துவதில் தொடங்கி உடற்பயிற்சி, மன அமைதி என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப நிகழ்வுகள், பண்டிகை கொண்டாட்டம், நண்பர்களுடன் ஊர்சுற்றல் என பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும். உங்கள் சுயஒழுக்கம் உங்கள் வெற்றியை இலகுவாக்கும். நிலையான தொடர் கற்றலை கைவிட்டால் வெற்றி தள்ளிப் போகும்.
30 வயது தாண்டினால் முடியாது, ஆங்கிலம் சரளமாக இருந்தால்தான் முடியும் என்பன போன்ற கருத்துகள் எல்லாம் பொய். நான் முதலில் இன்டர்வியூ சென்ற போது எனக்கு 31 வயது. நிர்வாக கோப்புகளைப் பார்த்து விரைந்து முடிவு எடுக்கும் அளவுக்கு ஆங்கிலத்திறன் இருந்தால் போதுமானது. இவ்வாறு பேசினார்.
வாசிப்பு மிக அவசியம் இந்நிகழ்வில் ஊக்க உரையாற்றிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் பேசியதாவது: என் பெற்றோர் அரசு ஊழியர்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளிக்கு சைலேந்திரபாபு வந்தார். அப்போது, ‘நீங்களும் ஓர் ஐபிஎஸ்’ என்ற அவரது புத்தகத்தை ஒரேநாள் இரவில் படித்து முடித்தேன். அதுவே என் முதல் விதை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த போது, முதலில் வேறு விருப்பங்கள் இருந்தாலும், இறுதியாண்டில் யுபிஎஸ்சி மீது ஈர்ப்பு வந்தது. வார இறுதி பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.
அப்போதுதான் நாளிதழ் படிக்கும் பழக்கம் அதிகமாகி, அது எனக்கு பெரிதும் உதவியது. டிகிரி முடித்த உடனே நான் வேலைக்கு செல்லாமல் பயிற்சி எடுக்க எனது குடும்பத்தினரும் உதவினர். அதன்பிறகு டெல்லி சென்று பயிற்சி வகுப்பில் முழு நேரம் சேர்ந்தேன். நாளிதழ் வாசிப்பது மிக அவசியம். வாசிக்கும் போது முழுத்தகவல்களையும் ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்க, அடுத்ததடுத்த வாசிப்பு சுலபமாகிக் கொண்டே செல்லும்.
இதுவெல்லாம் ஆர்வத்துடன் கூடிய பழக்கத்தில் வந்துவிடும். மாதிரி வினாக்களை போட்டுப் போட்டுப் பார்க்க தன்னம்பிக்கை வந்துவிடும். மனதில் இருப்பதை எழுத்துப் பூர்வமாக எடுத்து வர வேண்டும். எழுத்துப்பயிற்சியை இன்று முதல் இதற்காக தொடங்கினால் பயன் தரும்.
நம் பர்சனாலிட்டியை வெளிக்கொண்டு வரவே இன்டர்வியூவைக்கிறார்கள். அதனால்தான் அதற்கு ‘பர்சனாலிட்டி டெஸ்ட்’ என்று பெயர். தெரியாததை, ‘தெரியாது’ என்று வெளிப்படையாக சொல்வது எப்போதும் சிறந்தது. யுபிஎஸ்சி இன்டர்வியூவில் அது மிக முக்கியம்.
நான் முதல் முறையே தேர்வானேன். விருப்பமான ஐபிஎஸ்-ஐ தேர்வு செய்து பணிக்கு வந்திருக்கிறேன். சரியாக தயாராகாமல் செல்லாதோருக்குதான் யுபிஎஸ்சி கடினமானது. தொடர் முயற்சியோடு விரும்பி படித்தால் வெற்றி நிச்சயம்.
கல்வியில் சிறந்து விளங்கும் ஒருவர்தான் யுபிஎஸ்சி தேர்வில் வெல்ல முடியும் என்ற கருத்து தவறானது. பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்தவர்கள் தொடங்கி பலரும் இந்தத் தேர்வை வென்றுள்ளனர்.
முதல் முறையே யுபிஎஸ்சியை வெல்வது கடினம் என்ற கருத்தும் தவறானது.‘உங்களுக்குள் ஒரு கனவு தூங்க விடாமல் இருக்க வேண்டும்’ என்ற கலாமின் கனவுகளை கடைப்பிடியுங்கள். முழு ஆர்வத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் - நிர்வாக இயக்குநர் பூமிநாதன் பேசுகையில், “ தொடர் முயற்சி, அயராத உழைப்பு, திட்டமிடல் காரணமாக சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பலர் இன்று ஆட்சியர்களாக, காவல்துறை உயர் அதிகாரிகளாக உள்ளனர்.
இங்கு உங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருக்கும் பெற்றோர், சரியான நேரத்தில், சரியான பாதையில் அவர்களை இதற்காக தயார்படுத்துங்கள்” என்றார். தொடர்ந்து கிங் மேக்கர்ஸ் கருத்தாளர் ஆதில் பைக் யுபிஎஸ்சி தேர்வுக்கான கருத்துரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவி பொது மேலாளர் (நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்றும் விற்பனை பிரிவு) முருகேசன் பேசும்போது, “எனது இருமகள்கள் யுபிஎஸ்சி தேர்வை வெல்ல முக்கியக் காரணம் இந்நிகழ்ச்சியே.
6 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியில் அவர்கள் முதலில் பங்கேற்றனர். அன்றைய நிகழ்வு அவர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக அமைந்து, அவர்களை வெற்றி பெற வைத்தது. எளிமையான குடும்பங்களில் இருந்த பலரையும் உயர் பொறுப்புகளில் யுபிஎஸ்சி அமர்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.