சென்னை: கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி செயலி உருவாக்குவது குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு இன்று (15-ம் தேதி) முதல் ஜூலை 17-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்த வகுப்பில் சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ, நோட்புக் எல்.எம். கிளைடு, ஜேபியர், போல்ட், ஃபயர்பேஸ், ரெப்லிட் போன்ற பிரபலமான தளங்களைக் கொண்டு நேரடியாக செயலிகளை உருவாக்க கற்றுக்கொடுக்கப்படும்.
இத்துடன் முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏஐ கருவிகள், செயலிகளை உருவாக்க தேவைப்படும் ஏஐ ப்ரோடோடைப்கள், ப்ராம்ட் இன்ஜினியரிங் முறைகள், ஏஐ வலைதளங்களை உருவாக்குதல், அதற்கான செயல்முறை பயிற்சி, தொழில்துறைக்கு தேவையான தானியங்கி முறைகள், கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளுக்கான பயன்பாட்டு மாதிரிகள், ஏஐ வணிகம் மற்றும் ப்ரோடோடைப்பை முதலீட்டாளர்கள் முன் சமர்ப்பிக்கும் திறன், குறைந்த செலவில் ஸ்டார்ட்-அப் யோசனைகளை பரிசோதித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சியடைந்த ஆண், பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம். கணினி அனுபவம் அவசியம். வெளி மாவட்ட பயனாளர்களுக்கு தங்கும் விடுதி ஏற்படுத்தித் தரப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு www.editn.in அல்லது 8668100181, 9360221280 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியை முடிப்பவர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படும்.