கல்வி

ஸ்பேஸ் கிட்ஸின் ‘இளம் இந்திய விஞ்ஞானி’ நிகழ்வில் தமிழக அரசுப் பள்ளி மாணவருக்கு முதல் பரிசு!

செய்திப்பிரிவு

சென்னை: ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சார்பில் ‘இளம் இந்திய விஞ்ஞானி’ விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 24 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும், அவர்களின் அறிவியல் திறன்களை வெளிப்படுத்தும், வழிகாட்டும் நோக்கத்துடன் 2013-ஆம் ஆண்டு முதல் ‘இளம் இந்திய விஞ்ஞானி’ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் 12-வது நிகழ்வு நவம்பர் 21 அன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள வேர்ல்ட் யுனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் நடந்தது. இதில் 24 மாநிலங்களில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்களின் 110 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த 12-வது ஆண்டு நிகழ்ச்சியில், தங்களின் தனித்துவமான கண்டுபிடிப்புகள், அறிவியல் பங்களிப்புகள் மூலமாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ரோகன் முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ப்ரதிக் பிரதான் ரூ.30,000, மூன்றாவது பரிசாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் சுசோவன் ஜனா ரூ.15,000 வென்றனர்.

இந்த நிகழ்ச்சியில், வரவேற்று பேசிய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனரும், செயல் தலைவருமான ஸ்ரீமதி கேசன், மாணவர்களை பெரிய கனவு காணவும், தொடர்ந்த கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டுக்கு பங்களிப்பினைச் செய்யவும் ஊக்கப்படுத்தினார்.

இந்த நிகழ்வில், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல இருக்கும் க்ரூப் கேப்டன் அங்கத் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் பல்வேறு அமர்வுகளில் சர்வதேச அளவிலான நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர். இந்த அமர்வுகள் அரசு பள்ளி மாணவகளுக்கு சர்வதேச அளவிலான நிபுணர்களுடன் உரையாடுவதற்கும், வகுப்பறைகளை தாண்டி அறிவியலைக் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

கடந்த 12 ஆண்டுகளில் ‘யங் சயின்ட்டிஸ்ட் இந்தியா’ நிகழ்ச்சி, 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு  வழிகாட்டி உள்ளது. இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.45 லட்சத்துக்கும் அதிகமாக பரிசுகளை வழங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT