கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி, பட்டீஸ்வரம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 4ம் தேதி இப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் சிலர் தாக்கி திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கவியரசன் (17) தலையில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 7ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீஸார் விசாரணை நடத்தி, பிளஸ் 1 மாணவர்கள் 15-க்கும் மேற்பட்டோரை டிச.5ம் தேதியே கைது செய்து தஞ்சாவூர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடித்து டிச.8ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி, தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை, அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து 2-வது நாளாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி, கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவுரைகள் ஆலோசனைகளை வழங்கி, நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு மற்றும் அரசு பொது தேர்வுகளில் ஒரு மனதோடு நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று தமிழகத்தில் சிறந்த மாணவனாக வர வேண்டும். இதற்கிடையில் எந்த ஒரு மன அழுத்தத்திற்கும், சஞ்சலத்திற்கும் ஆளாகக் கூடாது என அறிவுரைகளை வழங்கினர்.
அதனை தொடர்ந்து, 11ம் மற்றும் 12ம் வகுப்பறைக்கு நேரில் சென்று தங்களுக்கு மனதில் ஏதேனும் குறைகள் இருந்தால், எந்த ஒரு அச்சமின்றி நான் தனியாக இருக்கும் அறைக்கு வந்து ரகசியமாக தெரிவிக்கலாம். தங்களது ரகசியம் காக்கப்படுவதுடன், அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என கூறினார். 3-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர் இருக்கும் அறைக்கு சென்று ரகசியமாக பேசி உள்ளனர் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.