புதிய பாடத் திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நூல்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வெளியிட, துறைச் செயலர் சந்திரமோகன் பெற்றுக் கொண்டார். உடன் அதிகாரிகள்.
சென்னை: கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை அலுவல் ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகன் தலைமை வகித்தார். துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
வரும் (2026-27) கல்வி ஆண்டில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்பா? - இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
நாளை 10-ம் வகுப்பு ரிசல்ட்: 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது. எனவே, புதிய பாடத்திட்டம் தொடர்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால் 1 முதல் 3-ம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 20-ல் (நாளை) வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக ராஜ்மோகன் தலைமைச் செயலகத்தில் நேற்று பொறுப்பேற்றார். அரசுப் பள்ளிகளுக்கு ரூ.80.64 கோடியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, பெரம்பலூர் அரசுமாதிரிப் பள்ளிக்கு ரூ.56 கோடியில் வகுப்பறை, விடுதிகள் கட்டுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.