

கேரள முதல்வராக வி.டி.சதீஷன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவுக்கு வந்த மூதாட்டி ஒருவர் தனது மகிழ்ச்சியை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியுடன் பகிர்ந்து கொண்டார். படம்: பிடிஐ
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக வி.டி.சதீஷன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) 22 இடங்களில் வென்றது. இடது ஜனநாயக முன்னணி 35 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.
முதல்வர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக சதீஷன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆட்சி அமைக்ககேரள ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் அவர் உரிமை கோரினார்.
அதை ஏற்று, ஆளுநரும் அழைப்புவிடுத்தார்.இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நேற்று காலை நடைபெற்றது. வந்தே மாதரம், தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக சதீஷன் பதவியேற்றார்.
20 அமைச்சர்கள் பதவியேற்பு: அவரைத் தொடர்ந்து, காங்கிரஸின் 11 எம்எல்ஏக்கள், கூட்டணியைச் சேர்ந்த ஐயூஎம்எல் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், ஆர்எஸ்பி, சிஎம்பி கட்சிகளின் எம்எல்ஏக்கள் என மொத்தம் 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 14 பேர் புதியவர்கள். அமைச்சரவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, கே.முரளிதரன், சன்னி ஜோசப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐயூஎம்எல் சார்பில் குஞ்ஞாலிகுட்டி, ஷாஜி, பி.கே.பஷீர், சம்சுதீன், அப்துல் காபர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்கள் தவிர மான்ஸ் ஜோசப், சிபு பேபி ஜாஜ், அனுப் ஜேக்கப், சி.பி.ஜான், அனில் குமார், சித்திக், விஷ்ணுநாத், ரோஜி எம் ஜான், பிந்து கிருஷ்ணா, லிஜ்ஜு, துளசி, ஜனீஷ் ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு,கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் சதீஷன் தலைமையிலான புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
கேரளாவில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. புதிய முதல்வராக சதீஷன் பொறுப்பேற்றுள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கல்லூரி மாணவராக இருக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் மாணவர் இயக்கத்தில் (என்எஸ்யுஐ) சேர்ந்து, தேசியச் செயலராக பணியாற்றினார்.
பரவூர் தொகுதி எம்எல்ஏவாக 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சதீஷன், தொடர்ந்து 6 முறை அதே தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், இவருக்கு கட்சியில் முக்கியபொறுப்பு எதுவும் எளிதில் கிடைக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார் சதீஷன். 2021-ல் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது நீண்ட கால காத்திருப்புக்குப் பலனாக தற்போது முதல்வராகியுள்ளார்.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வராக வி.டி.சதீஷன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, கேரள அரசுப் போக்குவரத்து பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்வதற்கான உத்தரவில் முதல்வர் சதீஷன் முதல் கையெழுத்திட்டார். அடுத்ததாக, தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, ஆஷா ஊழியர்களுக்கு ரூ.3,000 சம்பள உயர்வுக்கான உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
அங்கன்வாடி பணியாளர்களின் மாத ஊதியம் ரூ.1,000 உயர்த்தப்பட்டது. முதியோர்களுக்கு தனித் துறை தொடங்கவும் உத்தரவிடப்பட்டது. மூத்த எம்எல்ஏ சுதாகரனை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்ய ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. கேரளாவின் புதிய எம்எல்ஏக்கள் 21-ம் தேதி பதவியேற்கின்றனர். சபாநாயகர் தேர்வு 22-ம் தேதி நடைபெறும்.