இடம்: பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எழும்பூர். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் நாளை (ஜூன் 4) முதல் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கத்தைவிட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரையும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16-ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நாட்களில் தமிழக அரசு சார்பில் மாணவர்கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 4) முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுதவிர புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைக் கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2026-27) நாட்காட்டியானது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.