சென்னை: அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) கடந்த 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
அதன்படி, பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் கற்றல், சேர்க்கை, மேலாண்மை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து, 2026-28-ம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் ஆகஸ்ட் 29-ம் தேதி நடத்தப்பட வேண்டும்.
அதைத் தொடர்ந்து எஸ்எம்சி மறுகட்டமைப்பு பணிகள் தொடக்கப் பள்ளிகளில் செப்டம்பர் 12, 19-ம் தேதிகளிலும், நடுநிலைப் பள்ளிகளில் செப்டம்பர் 26-ம் தேதியும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 10-ம் தேதியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.