சென்னை: வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகளைத் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான இணையவழி ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் மூலம் வட்டாரங்கள் வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே போட்டித் தேர்வுகள், உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு வருவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
அதன்படி வெற்றிப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் மாதந்தோறும் இணையவழியில் ஆய்வுக் கூட்டம் நடத்தி பள்ளிகளின் செயல்பாடுகள், கற்பித்தல் முன்னேற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமை பயிற்சி வகுப்புக்கு பின்பும் மாணவர், ஆசிரியர் வருகை, கற்பிக்கப்பட்ட பாடப்பகுதிகள், சிறப்பு செயல்பாடுகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் பெற்றுத் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
மாதிரிப் பள்ளிகளால் மதிய உணவு வழங்கப்படாத வெற்றிப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து மாணவர்களுக்குத் தரமான மதிய உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.