சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் விருது’ நிகழ்வு சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. இதனை ராஜலட்சுமி இன்ஜினீயரிங் கல்லூரி இணைந்து வழங்குகிறது.
பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம், சாந்தாஸ் சில்க்ஸ் மதுரை, பிஎஸ்ஆர் சில்க் சாரீஸ், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஆகியன பங்குதாரராக இணைந்துள்ளன. மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘அன்பாசிரியர்’ விருதுகள் வழங்கப்பட்டன.
ஆறாவது ஆண்டாக அன்பாசிரியர் விருதுகள் வழங்கும் நிகழ்வு சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையிலுள்ள வாணி மஹாலில் வரும் சனிக்கிழமை (ஆக. 29) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்விருதுக்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பித்திருந்தனர். அதில் 180 ஆசிரியர்கள் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை மூத்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவினர், ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்து, அதிலிருந்து 50 ஆசிரியர்கள் ‘அன்பாசிரியர் விருது’ பெறவும், 2 ஆசிரியர்கள் ‘சிறப்பு ஆசிரியர் விருது’ பெறவும், ஓரு ஆசிரியர் ‘முன் மாதிரி ஆசிரியர் விருது’ பெறவும் தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட 53 ஆசிரியர்களுக்கும் வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.