புதுச்சேரி பெண் மருத்துவர் வைகவி
சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான யுபிஎஸ்சிதேர்வில் புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் தேசிய அளவில் 306-வது இடம் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உட்பட 23 சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணை யம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. முதல் நிலை தேர்வு. முதன்மை தேர்வு. நேர்முக தேர்வு என மூன்று நிலைகளாக இத்தேர்வு நடத்தப்படுகின்றன.
அதன்படி 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் மருத்துவர் வைகவி (26) தேசிய அளவில் 306-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இவரது தந்தை வேலு சரவணன். புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தாயார் முத்துலட்சுமி. தனது பள்ளிப்படிப்பை தனியார் பள்ளியில் முடித்த வைகவி, கடந்த 2022ம் ஆண்டு கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் முடித்தார்.
அதே பல் மருத்துவ கல்லூரியில் ஓராண்டு இளநிலை உள்ளிருப்பு பல் மருத்துவராக பணியாற்றினார். அதன் பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வந்த நிலையில் தனது 2-வது முயற்சியிலேயே தேசிய அளவில் 306-வது இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து வைகவி கூறும்போது, "சிறு வயதில் இருந்து டாக்டராக வேண்டும் என்பதுதான் ஆசை. அதன்படி பல் மருத்துவம் முடித்தேன். ஓராண்டு உள்ளிருப்பு பல் மருத்துவராகவும் பணியாற்றினேன். பிறகு, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக சென்னையில் உள்ள ஒரு ஐஏஎஸ் அகாடமியில் ஓராண்டாக படித்தேன். கடந்தாண்டு முதல் நிலை தேர்வின் போது உடல் நிலை சரியில்லாமல் போனது.
இதனால் முதல்நிலை தேர்வில் தகுதிபெற முடியவில்லை. பிறகு, வீட்டுக்கு வந்து ஓராண்டாக படித்து வந்தேன். தினமும் 8 முதல் 10 மணி நேரம் படித்தேன். பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். இதனால் 2-வது முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.