சென்னை: பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 17-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ்-2 பொதுத்தேர்வுக் கான விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் ஜூன் 5 முதல் 15-ம் தேதி வரை பாடவாரியாக பல்வேறு கட்டங்களாக அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆங்கிலம், உயிரியல், கணிதம் பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை ஜூன் 12-ம் தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் ஜூன் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
விடைத்தாள் நகல்: விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.