மதுரையிலிருந்து மானாமதுரையில் இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில் வரும் உடற்கல்வி ஆசிரியர் ராபின் சுந்தர்சிங்.

 
கல்வி

110 கி.மீ சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்லும் மதுரை உடற்கல்வி ஆசிரியர்!

இ.ஜெகநாதன்

மானாமதுரை: மதுரையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர், மானாமதுரையில் உள்ள பள்ளிக்கு 110 கி.மீ. சைக்கிளில் வந்து செல்கிறார். மதுரை கூடல்நகரைச் சேர்ந்தவர் ராபின் சுந்தர்சிங் (47). இவர் மானாமதுரையில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 2005-ம் ஆண்டு முதல் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர் மதுரையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு ஒருநாள் இடைவெளி யில் சைக்கிளில் வந்து செல் கிறார். இதற்காக காலை 5.30 மணிக்கே வீட்டிலிருந்து புறப்படும் அவர், காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்து சேருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டிலிருந்தே இந்த பழக் கத்தை கடைப்பிடித்து வருகிறார். மேலும், பள்ளிக்கு வரும்போதே சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளை கிராம இளைஞர்களுக்கு விளக்கி வருகிறார். இவரது விழிப்புணர்வால் பலர் சைக்கிள் ஓட்டத் தொடங்கி யுள்ளனர்.

மேலும் அவர் பணிபுரியும் பள்ளியில் ஆட்டோக்கள், வேன்களில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தற்போது சைக்கிளில் வர தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ராபின் சுந்தர்சிங் கூறியதாவது: கரோனா பரவல் காலத்தில் போக்குவரத்தும், பள்ளிகளும் முடங்கின.

அந்த சமயத்தில் உடற்பயிற்சிக்காக நானும், எனது நண்பர்களும் சைக்கிளில் கூடல்நகரிலிருந்து அலங்காநல்லூர் வரை சென்று வந்தோம். அதன்பின்னர் பள்ளிகள் திறந்ததும் சைக்கிளிலேயே சென்றுவர முடிவு செய்தேன்.

காலையில் 55 கி.மீ., மாலையில் 55 கி.மீ., சைக்கிள் ஓட்ட முதலில் தயக்கமாக இருந்தது. பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. சைக்கிள் ஓட்டுவதால் சோர்வு ஏற்படவில்லை. உடல்நலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காலை, மாலை என 110 கி.மீ. சைக்கிள் ஓட்டுவதால் ஒருநாள் ஓய்வு கொடுப்பேன்.

சைக்கிள் என்றாலும் தலைக்கவசம் அணிந்தே ஓட்டுவேன். எங்கள் பள்ளியில் 100-க்கும் குறைவானவர்களே சைக்கிளில் வந்தனர்.

அவர்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வால், கூடுதலாக 50 பேர் சைக்கிளில் வரத் தொடங்கியுள்ளனர். அறிவுரை சொல்வதை விட, நாமே முன்னுதாரணமாக இருக்கும்போது மாணவர்கள் எளிதில் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT