பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி - நுழைவு கட்டணம் எவ்வளவு?

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்

Updated on
2 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் திறக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட நேற்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரியவர்கள், சிறியவர்களுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்ச நல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர் பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை, ரெட்டியார் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி திறந்து வைத்தார். இதை பொதுமக்கள் பார்வையிட நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளை.

பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாராள் தக்கர் கல்லூரி சாலை, ஜோஸ் பள்ளி விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நுழைவு கட்டணம் நிர்ணயம்: அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 , மாணவ, மாணவியருக்கு ரூ.5, வெளிநாட்டு பெரியவர்களுக்கு ரூ.50, வெளிநாட்டு சிறியவர்களுக்கு ரூ.25, 5-D தியேட்டர் (ஐந்திணை) ரூ.25, VR (7D) BOAT SIMULATOR MOVEMENTS ரூ.25, கேமரா எடுத்துச் செல்வதற்கு ரூ.30, வீடியோ கேமராவுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். மாலை 6 மணிக்கு மேல் நுழைவுச்சீட்டு வழங்கப்படாது. செவ்வாய்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். தொடக்க நாளான நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை பார்வையிட்டனர்.

ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் முதுமக்கள் தாழிகள், தங்க நகைகள், வெண்கலப் பொருட்கள், இரும்பு ஆயுதங்கள், தங்க நெற்றிப் பட்டை, வெண்கல வடிகட்டி, அலங்கார கிண்ணங்கள் போன்ற பொருட்கள் பார்வையாளர்களை கவர்கின்றன.

சிவகளை கட்டிடத்தில் கருப்பு சிவப்புப் பானைகள், கருப்பு சிவப்புப் பானையோடுகள், ஈமத்தாழிகள், உயர் வெண்கலத்தாலான கலன்கள், இரும்பாலான கருவிகள், படையல் கலன்கள், பலவண்ண மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

கொற்கை கட்டிடத்தில் தமிழ் பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, சங்கு வளையல்கள், சங்குக் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், கொற்கைத் துறைமுகம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

துலுக்கர்பட்டி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி முத்திரையிடப்பட்ட நாணயம், தந்தத்தினால் ஆன பொருட்கள், கண்ணாடி (ஆடி) மணிகள், சுடுமண் மணிகள், சூதுபவளம், அகேட், செவ்வந்தி, பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அரிய கல்மணிகள், பல்வேறு வகையான இரும்புப் பொருட்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள் மற்றும் சக்கரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்த வெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர்க் கைவினைப் பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்</p></div>
போக்சோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியர் தருமபுரி சிறையில் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in