சிதம்பரம்: வயலூரில் பள்ளி மாணவர்களுக்கான அமைதித் தூதுவர் சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (நவ.13) நடைபெற்றது.
இந்த விழாவில், சிதம்பரம் வயலூர் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைச் சிறப்புப் பள்ளி மற்றும் காமராஜ் சர்வதேசப் பள்ளி மாணவர்கள், மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது குறித்த குறுநாடகங்களை அரங்கேற்றினர்.
அமைதியை வளர்க்கும் பண்புகளை எடுத்துரைக்கும் கதைகளைச் சொன்னதோடு, அனைவரும் பங்கேற்கும் வகையில் தாங்கள் வடிவமைத்த விளையாட்டுகள் பற்றியும் பேசினர். அமைதிக்கான ஆறு விதிகளைக் கடைப்பிடித்து, 30 நாள்களுக்குத் தினமும் சிறு செயல்களை மேற்கொண்டதன் மூலம் தங்களது நடத்தையில் உணர்ந்த மாற்றங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
நவம்பர் 13 அன்று நடைபெற்ற அமைதித் தூதர் சான்றிதழ் வழங்கும் விழாவில் மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
‘ஜென் Z டு ஜென் பீஸ்’ இயக்கத்தின் கீழ், இரண்டு பள்ளிகளும் சென்னை காந்தி அமைதி நிறுவனமும் இணைந்து இவ்விழாவை நடத்தின.
முன்னதாக அமைதி, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் சென்னை காந்தி அமைதி நிறுவனம் நடத்திய நான்கு மணி நேரப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் அமைதித் தூதர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் சிதம்பரம் காந்தி மன்றத் தலைவர் ஞானம், சென்னை காந்தி அமைதி நிறுவனச் செயலர் முனைவர் சூ. குழந்தைசாமி, நிர்வாகப் பொறுப்பாளர் ச.இந்துமதி ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளிகளின் சார்பில் தாளாளர்கள் மனோன்மணி, அனிஷா மஞ்சேனி, கல்வி இயக்குநர் கீதா பாபு, முதல்வர்கள் சந்திரா, ஆனந்தி ஆகியோர் பங்கேற்றனர்.