2027-க்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பரில் வெளியீடு

2027-க்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பரில் வெளியீடு
Updated on: 
1 min read

சென்னை: 2027-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பரில் வெளியிடப்படுகிறது. காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு துறைகள் மற்றும பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் அலுவலர்களும், ஊழியர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தி தகுதியுள்ள நபர்களை அரசு பணிக்கு தேர்வு செய்து வருகிறது.

ஓராண்டில் என்னென்ன அரசு பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும்? தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என அனைத்து விவரங்களும் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக இந்த தேர்வு அட்டவணை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

2026-ம் ஆண்டு வருடாந்திர தேர்வு அட்டவணையில் குரூப்-4, குரூப்-2, குரூப்-1 தேர்வுகள் உள்பட மொத்தம் 6 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் 3 தேர்வுகளுக்கான பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டன. எஞ்சிய 3 தேர்வுகளுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், 2027-ம் ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அனைவரும் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 2027-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்னென்ன தேர்வுகள் என்பது பற்றிய முழு விவரமும் அதில் இடம்பெறும் என்று தெரிவித்தனர்.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என அரசு அண்மையில் அறிவித்துள்ள நிலையில், 2027 தேர்வு அட்டவணை மூலம் அதிக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுத் துறைகளில் நான்கரை லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அவற்றை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தவெக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும் என 2026 சட்டப்பேரவை தேர்தலின்போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2027-க்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பரில் வெளியீடு
கோவையில் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப் பதிவு

X