சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை உடனடியாக பணிநிரவல் செய்ய தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் பணியாளர் எண்ணிக்கை நிர்ணயம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, மாணவர் - ஆசிரியர் விகிதப்படி கணக்கிடப்பட்டு, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒப்புதல் பெறப்பட்ட பட்டியல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிச் சட்டம் மற்றும் விதிகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த பணியாளர் நிர்ணய அறிக்கைகளை பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து பள்ளிகளில் உபரி பணியிடங்கள் கண்டறியப்பட்டால், உடனே பணிநிரவல் அல்லது மாற்றுப் பணி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை.
உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் அல்லது மாற்றுப் பணி ஆணைகளை உடனே வழங்கி, அதன் விவரங்களை ஜன.23-க்குள் இயக்குநரகத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,200-க்கும்மேற்பட்டோர் உபரியாக இருப்பதாக கூறப்படுகிறது.