கோப்புப் படம்
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடைமருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 15 சதவீதம் ஒதுக்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 60 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் இருக்கின்றன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. அதேபோல், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள இணைப்பு கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் இருக்கின்றன இந்த 3 பி.டெக் பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
இந்நிலையில், பி.வி.எஸ்சி- ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2026- 27-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.