சென்னை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னரே பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலர் ஏ.சத்தியபாமா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளின்படி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக்குழுக் கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்குமான வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.
எனவே, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் திருத்திய வழிகாட்டுதல்களுக்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்ட பிறகு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.