கோப்பு படம்

 
கல்வி

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: பள்ளி கல்வித்துறை

வெற்றி மயிலோன்

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியின் பள்ளிக் கல்வித்துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பள்ளிக் கல்வித்துறையில் எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதன் விவரம் ஒரு பார்வை.

இல்லம் தேடிக் கல்வித்திட்டம்: திராவிட மாடல் அரசின் பள்ளிக் கல்வித் துறையில் கரோனா காலக் கற்றல் இடைவெளியைக் குறைத்திட 19.10.2021 அன்று “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2021-22 முதல் 2024–25 ஆம் கல்வியாண்டு வரை ரூ,660.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 2024–2025 ஆம் ஆண்டில் 50,000 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வரையில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 7.97 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

வாசிப்பு இயக்கம்: அன்றாடம் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிப்பு இயக்கம் ஒரு முன்னோடித் திட்டமாக 11 மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் தொடங்கப்பட்டு, 914 அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள 66,618 மாணவர்கள் பயனடைந்தனர்.

எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையும் 2025 ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” திட்டம் தொடங்கப்பட்டது.

உள்ளடக்கிய கல்வி: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணவும், அதன் அடிப்படையில் தக்க சிறப்புக் கல்வி வழங்கவும், "நலம் நாடி செயலி" வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

38 மாதிரிப் பள்ளிகள்: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாதிரிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் பலர் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

28 தகைசால் பள்ளிகள்: மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த இப்பள்ளிகள் தளமாக விளங்குகின்றன. 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக ரூ.100.82 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

கலைத் திருவிழா: குழந்தைகளிடம் மறைந்திருக்கும் கலை உணர்வுகளை வெளிக்கொணரும் நோக்கில் பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. 2022-2023 ஆம் ஆண்டில் போட்டிகள் நடத்தப்பட்டு, 2024–25 ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்: பள்ளிகளில் ஆய்வகங்கள் மூலம் மாணவர்களின் ஆய்வுத் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Lab) அமைக்கப்பட்டுள்ளன.

திறன்மிகு வகுப்பறைகள்: அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455.32 கோடி செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கப்பட்டுள்ளன.

தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு: 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான சீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு 60,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான துறை சார் அகப்பயிற்சி (Internship) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அகப்பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களுக்குக் கைக்கணினிகள்: 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்:

பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் 614 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1087.76 கோடியும், 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், 391 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

வானவில் மன்றம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் ஆர்வத்தையும் திறனையும் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகத் திட்டம் (வானவில் மன்றம்) ரூ.11.69 கோடி செலவில் 33.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பேராசிரியர் அன்பழகன் விருது: கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி எனப் பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கும் திட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது: அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்துடன் வழங்கப்படுகிறது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்: இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024-2025 ஆம் கல்வியாண்டில் 3.28 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகள் அனைத்திலும் செயல்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் பயிலும் மாணவ / மாணவியருக்கு காலை உணவு வழங்கும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024–25 ஆம் கல்வியாண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உ

கல்வித் தொலைக்காட்சி: 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் காணொலிகளாக உருவாக்கி கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறது. மெய்ந்நிகர் ஒளிப்பதிவுக்கூடம்: நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, காணொலிகள் தயாரிப்பதற்காக, மெய்ந்நிகர் ஒளிப்பதிவுக்கூடம் உள்ளிட்ட 5 உயர்தொழில்நுட்பப் படப்பதிவுக்கூடங்கள் மற்றும் ஒரு ஒலிப்பதிவுக்கூடம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்காணொலிகள் மூலம் 58,721 பள்ளிகளில் உள்ள 1,23,73,598 மாணவர்களும் 5,32,909 ஆசிரியர்களும் பயன்பெறுவர்.

97 வட்டாரக் கல்வி அலுவலர்கள் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: 2021–22 ஆம் ஆண்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணைய வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023–24 ஆம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்குக் கணினி வழியாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் இலக்கிய விழா: 2023-2024 ஆம் ஆண்டு முதல் இலக்கியத் திருவிழாக்களுடன் கூடுதலாக இளைஞர் இலக்கிய விழா ஆண்டுதோறும் ரூ.30 இலட்சம் செலவில் நடத்தப்பட்டு வருகிறது.

சிறந்த கற்போர் மையங்களுக்கு விருதுகள்: வயது வந்தோர் கல்வித் திட்டச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய 228 சிறந்த கற்போர் மையங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை உள்ளடக்கிய மாநில எழுத்தறிவு விருது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.

புதிய எழுத்தறிவுத் திட்டம்: 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் பொருட்டு 2022–23 ஆம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.9.83 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 15 இலட்சம் கற்போர் தங்களின் அடிப்படை எழுத்தறிவைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்: மத்திய மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில், எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு, அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் ரூ.25 இலட்சம் செலவில், சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2023-24 மற்றும் 2024–25 ஆம் ஆண்டுகளில் முறையே 1,249 மற்றும் 1,398 எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறாக, முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நான்கரை ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்திய அளவில் சிறப்பான பல சாதனைகளைப் படைத்துப் பெருமைக்குரிய துறையாக உயர்ந்து சிறந்து விளங்குகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT