

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் நேற்று வல்லம்படுகையை சேர்ந்த மோகன் மகன் நவீன் (25), கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ராஜா மகன் கவுதம் (25), வல்லத்துரை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருள் என்கிற ஜெயக்குமார் (30) ஆகிய மூன்று பேரையும் உசுப்பூர் ரயில்வே கேட் பகுதியில் ஒரு பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் பிடித்தனர். அப்பொழுது நவீன் கத்தியை காட்டி தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு நவீன் கைது செய்யப்பட்டார். இன்று (நவ.23) காலை 6 மணி அளவில் போலீசார் நவீனை அழைத்துக் கொண்டு அவர் மறைத்து வைத்த கஞ்சா மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய மாரியப்பா நகர் முட்புதர் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அவர் காவலர் ஐயப்பனை மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியால் வெட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் நவீனை வலது கால் முட்டியில் சுட்டு பிடித்தார்.
சுட்டுப் பிடிக்கப்பட்ட நவீன் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டார். நவீனால் இடது கையில் வெட்டப்பட்ட காவலர் ஐயப்பனும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் ஐயப்பனை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளரிடம் கூறிய மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், “கடலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் இதுவரை கஞ்சா வழக்கில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட நவீன் அண்ணாமலை நகர் காவல் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி. நவீன் மீது அண்ணாமலை நகர், மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம், சீர்காழி ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்ளது” என தெரிவித்தார்.