சென்னை: சென்னை ஐஐடியில் 2026-ம் ஆண்டுக்கான ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்பக் கலை விழாவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜன. 2-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்களின் தொழில்நுட்பத்திறன், படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் வகையில் சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்ப விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ‘2026 சாஸ்த்ரா’ விழா ஜன.2-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் இருந்து 80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
80 வகை நிகழ்ச்சிகள்: இதில் ரோபோடிக் சண்டை, காது கேளாதோருக்கான சிறப்பு தொழில் நுட்பக் கருத்தரங்கு, செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு, இசை நிகழ்ச்சிகள், ஐஐடி ஆராய்ச்சிகள் தொடர்பான கண்காட்சிகள் என 80 வகையான தொழில்நுட்ப நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
‘வெற்றிப் படிக்கட்டு’ என்ற பெயரில் தமிழில் விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு தொழில் நிறுவனங்கள் ரூ.1.68 கோடி நன்கொடை வழங்கியுள்ளன.
சாஸ்த்ரா நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பொதுமக்கள் www.shaastra.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆன்லைனில் உரிய கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டும் (பாஸ்) பெறலாம். விழாவின்போது, ஐஐடி குளோபல் ஃபவுண்டேஷனையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்கிறார்.
வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் இது செயல்படும். அமெரிக்கா, ஜெர்மனி, துபாய், மலேசியாவிலும் இந்த ஃபவுண்டேஷன் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.