

சென்னை: அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - செக்மேட் 2026’ எனும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியை வேலம்மாள் நெக்சஸ் இணைந்து நடத்துகிறது.
மாணவ-மாணவிகளிடம் இருக்கும் செஸ் விளையாட்டுத் திறனை வளர்த்தெடுக்கும் நோக்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 7, 8, 9-ம் வகுப்பு படிப்பவர்கள் ஜூனியர் பிரிவிலும், 10, 11, 12-ம் வகுப்பு படிப்பவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.
இப்போட்டி வரும் 2026 ஜனவரி 10 சனிக்கிழமையன்று காலை 9 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் கிராமத்தில் உள்ள அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் சென்னை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியை நடத்தும் அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் வேந்தர் மாதா அமிர்தானந்தமயி தேவி கூறியதாவது: கல்வி என்ற சொல்லின் உண்மையான பொருள், நம்முள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
நம் ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் உள்ளன; ஆனால் அதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. சுமை தூக்கும் தொழிலாளி, தனது வலிமையால் தலையில் சுமையைச் சுமந்து, வாழ்க்கையை நடத்துகிறார்.
அதேவேளையில், ஒரு விஞ்ஞானி தனது மூளையைப் பயன்படுத்தி அற்புதமான கண்டுபிடிப்புகளையும் புதுமைகளையும் உருவாக்குகிறார். அதுபோல நம்மில் ஒவ்வொருவருக்குள்ளும் அளவற்ற சக்தி மறைந்துள்ளது. அந்த சக்தி இருப்பதைப் பற்றிய உணர்வே பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை.
அதனை வெளிக்கொண்டு வரும் நல்ல முயற்சியாகவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இவ்வாறு கூறினார். இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான மொத்த பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. காபா செஸ் அகாடமி, ஆஷ் செஸ் ஹப் ஆகியன இப்போட்டிகளை நடத்த உறுதுணையாக உள்ளன.