பேராசிரியர் தாளப்பில் பிரதீப்

 
கல்வி

ஐரோப்பிய பொறியியல் கழக உறுப்பினராக சென்னை ஐஐடி பேராசிரியர் தேர்வு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: ஐரோப்பிய பொறியியல் கழக முழுநேர உறுப்பினராக சென்னை ஐஐடி பேராசிரியர் தாளப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய பொறியியல் கழகம் சுவீடன் நாட்டில் உள்ள கோதெர்ன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதில் நோபல் பரிசு பெற்றவர்கள், கணினி உலகின் நோபல் பரிசு என அழைக்கப்படும் டூரிங் விருது பெற்றவர்கள் போன்றோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், உலக அளவில் சிறப்பு வாய்ந்த ஐரோப்பிய பொறியியல் கழகத்தில் முழுநேர உறுப்பினராக சென்னை ஐஐடி வேதியியல் துறை பேராசிரியர் தாளப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சிஎன்ஆர்.ராவ், பீமன் பக்சி ஆகியோருக்குப் பிறகு இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் 3-வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் தாளப்பில் பிரதீப் நீர் சுத்திகரிப்பு மற்றும் நானோ டெக்னாலஜி துறையில் ஆற்றியுள்ள பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆர்சனிக், நச்சுகள் போன்ற மாசுபாடுகள் இல்லாத பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு அவர் கண்டுபிடித்த நானோ நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் காரணமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பத்மஸ்ரீ, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் உலகளாவிய அறிவியல் பரிசான சர்வதேச எனி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஐஐடி இயக்குநர் வாழ்த்து:

ஐரோப்பிய பொறியியல் கழகத்தில் முழுநேர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் தாளப்பில் பிரதீப்புக்கு சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT