சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடல்சார் பொறியியல் துறையின் பொன்விழா கொண்டாட்ட லோகோவை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி வெளியிட்டார். அருகில், கடல்சார் தொழில்நுட்ப சங்கத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிறிஸ் ஆஸ்ட்ரண்டர், ஐஐடி கடல்சார் பொறியியல் துறையின் தலைவர் அப்துஸ் சமது, பொன்விழா கொண்டாட்டக் குழுவின் தலைவர் எஸ்.ஏ.சன்னாசிராஜ்.
சென்னை: சென்னை ஐஐடி கடல்சார் பொறியியல் துறை, நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது என்று ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் முன்னணி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியில் கடல்சார் பொறியியல் துறை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன.
இதையொட்டி இத்துறையின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: சென்னை ஐஐடியில் கடல்சார் பொறியியல் துறை கடந்த 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
50 ஆண்டுகளாக இத்துறை நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
அத்திட்டங்களை பெற்ற நிறுவனங்கள், கடல்சார் துறையில் புதிய தளங்களை உருவாக்கியுள்ளன. அதன் மூலம் கடல்சார் துறையில் இந்தியா, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது பெருமளவு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கடல்சார் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் அப்துஸ் சமது பேசும்போது, “2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சியத்துடன் நம் நாடு இயங்கி வரும் நிலையில் கடல்சார் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை பலப்படுத்த இத்துறை உறுதிபூண்டுள்ளது.
அதோடு நாட்டின் நீல பொருளாதார வளர்ச்சிக்கும் நீடித்த கடல்சார் மேம்பாட்டுக்கும் தேவையான உதவிகளை இத்துறை தொடர்ந்து செய்யும்” என்றார்.
பொன்விழா கொண்டாட்டக் குழு தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ.சன்னாசிராஜ் பேசும்போது, “உள்நாட்டு நீர்வழிகள் முதல் கடலோரம் வரை, கடலோரப் பகுதி தொடங்கி ஆழ்கடல் வரை கடல்சார் பொறியியலின் அனைத்து தளங்களிலும் நம் நாடு சிறந்தோங்க இந்தத் துறை தொடர்ந்து பாடுபடும்” என்றார்.