

கோப்புப் படம்
சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட 27 வாகனங்களை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இளைஞர்கள் அவ்வப்போது பைஸ் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு போலீஸார் கைது செய்கின்றனர். மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது.
பைக் ரேஸை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீஸார் சென்னையின் பிரதான சாலைகளில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அவர்களின் கண்காணிப்பையும் மீறி நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரை சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை, பெரம்பூர் மேம்பாலம் உட்பட மேலும் சில சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.
மேலும் பைக்குகளில் சாகசத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர். இந்த பைக் ரேஸ் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்ட 27 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இந்த வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.