புதுடெல்லி: கடந்த ஜுன் 21-ம் தேதி மீண்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாயின. இத்தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதில் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று பஞ்சாப்பைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சால் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
அதே நேரத்தில், 19 பேர் 700 மதிப்பெண்களையும், 138 பேர் 690 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். குறிப்பாக, 690 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 138 தேர்வர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதன்முறையாக நீட்-யுஜி தேர்வை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வெற்றி குறித்து ஆரியன் குப்தா அளித்த பேட்டியில் கூறியதாவது: நீட் தேர்வுக்காக நான் கடுமையாக உழைத்தேன். எனது அர்ப்பணிப்பும், ஒரு நாளைக்கு 16 முதல் 17 மணி நேரம் வரை படித்ததே இந்த வெற்றிக்குக் காரணம். எனக்கு தூக்கமே வராது. ஆனால் இப்போது இது ஒரு கனவு போல வியப்பாக இருக்கிறது. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்கள் கூறுவதை அப்படியே பின்பற்ற வேண்டும்.
என்னுடைய பெற்றோர்கள் மருத்துவர்களாக உள்ளனர். நான் எதிர்காலத்தில் புற்று நோய் சிகிச்சை நிபுணராக விரும்புகிறேன். நான் 3-ம் வகுப்பு படிக்கும்போது எனது பாட்டி புற்று நோயால் இறந்தார். அப்போதே நான் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி பிறருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என சபதம் எடுத்தேன். இவ்வாறு ஆர்யன் குப்தா கூறினார்.