படம்: ம.பிரபு

 
கல்வி

பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை: எமிஸ் தளத்தில் பதிவு செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நிலையை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து 2025-26-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம்தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்த மற்றும் தேர்வெழுதாத மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நிலை, துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலை போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். தொடர்ந்து தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்களின் விவரங்களை வகுப்பாசிரியர்கள் உதவியுடன் எமிஸ் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

மேலும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் பயின்ற மாணவர்களின் தகவல்கள் எமிஸ் இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT