கோப்புப் படம்
சென்னை: குரூப்-2 மெயின் தேர்வு (பொது அறிவுத் தாள்) பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப்-2 பதவிகளுக்கான மெயின் தேர்வு (பொது அறிவு தாள் - விரிவாக விடையளித்தல்) ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பிப்.22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களின் ஒருமுறை பதிவு (ஒடிஆர்) வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டாய தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வு மார்ச் மாதம் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு கடந்த 8-ம் தேதி அன்று பிற்பகல் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வு மைய ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.