கோப்புப் படம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்-2 மெயின் தேர்வுக்கான கட்டணம் செலுத்த ஜன.2-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிச.22-ம் தேதி வெளியிடப்பட்டன.
மெயின் தேர்வு அடுத்த ஆண்டு பிப்.8 மற்றும் 22-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்னும் 766 தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்தவில்லை. அதேபோல், 113 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை. அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், தேர்வுக் கட்டணத்தை செலுத்தவும் கடைசி தேதி ஜன.2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த காலநீட்டிப்பை சம்பந்தப்பட்ட தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு மேல் எவ்வித காலநீட்டிப்பும் தரப்படாது என்று அவர் கூறியுள்ளார்.