சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தங்கள் பள்ளிக்கான செயல் திட்டங்களை தலைமையாசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
2025-2026-ம் கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பள்ளிகள் வாரியான பகுப்பாய்வு அறிக்கைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டன. ஆனால், இந்த அறிக்கைகள் இன்னும் பல்வேறு பள்ளிகளைச் சென்றடையவில்லை என்பது தகவல் கவனத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் இந்த அறிக்கைகளை எளிதாகப் பெறும் வகையில், தற்போது எமிஸ் தளத்திலேயே நேரடியாக பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையைக் கொண்டு தேர்வு முடிவுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பள்ளி ஆசிரியர்களுடன் விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும்.
மாணவர்களின் கற்றல் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தை பள்ளிகள் உருவாக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.