கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் பள்ளி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி.

 
கல்வி

கோவில்பட்டி சமூக நீதி விடுதியில் நீதிக்காக காத்திருக்கும் மாணவிகள்!

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள சமூக நீதி விடுதியில் தொட்டி இருந்தும் குழாய் பிரச்சினையால் தண்ணீர் கிடைக்காமல் மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும், மேற்கூரையும் பெயர்ந்து விழுவதால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.

கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் செல்லும் சாலையில் அஞ்சல் கோட்ட அலுவலகம் அருகே பள்ளி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தரைத்தளம், மேல்தளம் ஆகிய 2 தளங்கள் உள்ளன.

இதில், அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தங்கி உள்ளனர். தரைத்தளத்தில் சுமார் 95 மாணவிகளும், முதல் தளத்தில் சுமார் 65 பேரும் தங்கி உள்ளனர். தரைத்தளத்தில் தலா 10 குளியலறைகள், கழிவறைகளும், மேல் தளத்தில் 3 குளியலறைகளும், 2 கழிவறைகளும் உள்ளன.

மேல்தளம், தரைத்தளம் என தனித்தனி வார்டன்கள் மற்றும் காவலாளிகள் உள்ளனர். இந்த சமூக நீதி விடுதி 1985-ம் ஆண்டு கட்டப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் தற்போது விடுதி கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே உடைந்து விழுந்த வண்ணம் உள்ளது.

மேலும், மேல் தளத்தில் உள்ள கழிவறைக்கும், குளியலறைக்கும் கதவுகள் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், கட்டிடத்தின் மேல் பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு கழிவறை, குளியலறைகளுக்கு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக விடுதியில் உள்ள எந்த நல்லியிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால், குளியலறைக்கும், கழிவறை மற்றும் துணிகளை துவைக்கவும் மாணவிகள் வளாகத்தில் உள்ள தொட்டியில் இருந்து வாளியில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், மழைக்காலத்தில் கட்டிடத்தில் நீர் கசிவு உள்ளதால், மின் வயர்களில் தீப்பிடித்து, தரைத்தளத்தில் உள்ள கழிவறை மின்விளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன.

இதுகுறித்து விடுதியில் தங்கி உள்ள மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், “வறுமையின் காரணமாக எங்களது குழந்தைகளை அரசின் சமூக நீதி விடுதியில் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்புகிறோம்.

நீர் கசிவு காரணமாக மின் வயரில் தீப்பிடித்து அந்த இடமே கருப்பாக காணப்படுகிறது.

இங்குள்ள கட்டிடங்களில் நீர் கசிவு உள்ளதால் கழிவறைகளில் உள்ள மேற்கூரை பெயர்ந்து கீழே விழுகிறது. கடந்த வாரம் பெய்த மழையில் தரைத்தளத்தில் உள்ள கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அப்போது குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

வாரத்துக்கு ஒருமுறை அதிகாரிகள் இந்த சமூக நீதி விடுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆனால், இதுவரை மாணவிகளுக்கு குடிநீர் இணைப்பு கூட முறையாக வழங்கப்படவில்லை.

தினமும் விடுதி வளாகத்தில் உள்ள தொட்டியில் இருந்து வாளியில் தண்ணீர் பிடித்து கழிவறைக்கும், குளியலறைக்கும் எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து நாங்கள் வார்டன்களிடம் கேட்டால் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி உள்ளோம் என்கின்றனர். சமூக நீதி விடுதியில் உள்ள மாணவிகளுக்கு எப்போது நீதி கிடைக்கும் என தெரிய வில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT