குலசேகரன்பட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பால் அழியும் பனை மரங்கள்!

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாய்ந்து கிடக்கும் பனை மரங்கள்.

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாய்ந்து கிடக்கும் பனை மரங்கள்.

Updated on
2 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் கடற்கரையில் அண்மை காலமாக அதிகரித்துள்ள கடல் அரிப்பால் பனை மரங்கள் சாய்ந்து அழிந்து வருகின்றன.

குலசேகரன்பட்டினம் முக்கிய ஆன்மிக தலமாக இருப்பதுடன், தற்போது விண்வெளித் துறையில் நாட்டின் மிக முக்கியமான மையமாக உருவெடுத்து வருகிறது.

இங்கு அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தான் நடைபெறும்.

அதுபோல இந்த பகுதியில் இஸ்ரோ சார்பில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 2027-ம் ஆண்டு இங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குலசேகரன்பட்டினம் கடற்கரை அண்மை காலமாக கடல் அரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் அரிப்பு காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள பனை மரங்கள் வேரோடு சாய்ந்து அழிந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடல் அரிப்பில் பல பனை மரங்கள் வேரோடு சாய்ந்து அழிந்தன. இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு அதிகமாகி பனை மரங்கள் சாய்ந்து வருகின்றன.

பனை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், குலசேகரன்பட்டினத்தில் பனை மரங்கள் கடல் அரிப்பால் அழிந்து வருவது இயற்கை ஆர்வலர்களை வேதனையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான எஸ்.ஜே.கென்னடி கூறியதாவது: தமிழர்களின் தேசிய மரமான பனைமரம் தமிழ்நாட்டில் 5 கோடி உள்ளன.

இதில் அதிகப்படியாக 2 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன. அதிலும் பதநீர்,கருப்பட்டி, கற்கண்டுக்கு உலக புகழ் பெற்ற உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.

புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுப்பதற்காகவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கவும் தமிழர்கள் கடற்கரை ஓரங்களில் பனை மரங்களை வளர்த்து பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக கடற்கரையோரங்களில் உள்ள பனைமரங்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.

இதனால் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் பனை மரங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. ஒரு பனை மரம் முழுமையாக வளர்ச்சியடைய பல ஆண்டுகள் ஆகும். அவ்வாறு வளர்ச்சியடைந்து பலன் கொடுக்கும் மரங்கள் வேரோடு சாய்ந்து வருவது வேதனை அளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடி பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து கடற்கரையோரம் உள்ளிட்ட இடங்களில் நாங்கள் தொடர்ந்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். அவைகளும் முளைத்து வளரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கடற்கரையில் ஏற்கெனவே வளர்ந்த மரங்கள் அழிந்து வருவது கடற்கரை பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, கடல் அரிப்பை தடுத்து, பனை மரங்களை அழிவில் இருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

<div class="paragraphs"><p>குலசேகரன்பட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாய்ந்து கிடக்கும் பனை மரங்கள்.</p></div>
ஆகாய தாமரையில் இருந்து சானிட்டரி நாப்கின் - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கரூர் பள்ளி மாணவிகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in