சென்னை: சென்னை பல்கலைக்கழகம் 8 அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.50 லட்சம் தேர்வு செலவின நிதியை நிலுவையில் வைத்திருப்பதாக உயர்கல்வித்துறை செயலரிடம் அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் உயர்கல்வித்துறையின் செயலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 121 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 100 கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெறாத கல்லூரிகள்.
இந்த கல்லூரிகளில், திருத்தணி, பெரும்பாக்கம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், குன்றத்தூர், நெமிலி, உத்திரமேரூர் ஆகிய 8 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் அடங்கும்.
மேற்குறிப்பிட்ட 8 அரசு கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து ஒரு பருவத்துக்கு சுமார் ரூ.2 கோடி தேர்வு கட்டணமாக பெறப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு செலுத்தப்படுகிறது. ஆனால், இக்கல்லூரிகளில் தேர்வு நடத்துவதற்கு உரிய நிதியை சென்னை பல்கலைக்கழகம் வழங்குவதில்லை.
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பருவ தேர்வுகளுக்கு இதுவரை எந்த தொகையும் வழங்கப்படவில்லை. அந்த ஒரு பருவ தேர்வுக்கு மட்டும் 8 அரசு கல்லூரிகளுக்கு வழங்கப்படாத தொகை மட்டும் ரூ.25 லட்சம்.
கடந்த 2024 நவம்பர், 2025 ஏப்ரல் மற்றும் நவம்பர் ஆகிய 3 பருவ தேர்வுகளுக்கு முன்பணம் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்மூன்று பருவ தேர்வுகளுக்கான எஞ்சியுள்ள ரூ.25 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை.
மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மேற்குறிப்பிட்ட ரூ.50 லட்சத்தையும் தேர்வு நடத்திய ஆசிரியர்கள் தங்கள் சொந்த நிதியில் இருந்து செலவு செய்துள்ளனர். எனவே, அரசு கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து தேர்வுகள் நடத்துவதற்கு செய்துள்ள செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமா்று வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.